பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “பெண்கள் விசயத்தில் (நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். மேலும், விலாஎலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக்கோணலாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே பெண்கள் விசயத்தில் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.”                                                                                                                            (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “பெண்கள் வளைந்த விலாஎலும்பினால் படைக்கப்பட்டுள்ளாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்க மாட்டாள். அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியதுதான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப் போனால், அவளை ஒடித்தேவிடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்குச் செய்வதாகும்.”                                                                                              (முஸ்லிம்)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்கள்புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் முறையே 7ம் பாகம், 177ம் பக்கத்திலும், 4ம் பாகம் 178ம்பக்கத்திலும் பதிவாகியுள்ள ஸஹீஹான ஹதீஸ்களாகும். இவ்விரு ஹதீஸ்கள் தொடர்பில் சமூகஅரங்கில் உலாவரும் விளக்கங்களும், வியாக்கியானங்களும் பெண்கள் பற்றிய தவறான பிம்பத்தை கட்டமைக்கும் விதமாக, ‘இஸ்லாம் பெண்களை ஓரவஞ்சனையோடு நடாத்துகிறது’என்ற முஸ்லிமல்லாதாரின் குறிப்பாக பெண்ணிலைவாதிகளின் குற்றச்சாட்டுக்கு வலுவூட்டும்வண்ணமும் அமைந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். இந்நிலை, மேற்போந்த ஹதீஸ்கள் மீதான இயந்திரத்தனமான புரிதலினதும், தவறான வாசிப்பினதும் நேரடி வெளிப்பாடென்பதில் ஐயமில்லை. எனவே, இவ்விரு ஹதீஸ்கள் தொடர்பில் சரியான புரிதலை வாசகர்களுக்கு வழங்குவது காலத்தின் தேவையாகும்.

உண்மையில், மேலுள்ள ஹதீஸ்கள் பின்வரும் விடயங்களை தெளிவாக சுட்டிநிற்கின்றன.

பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள்.பெண்களிடம் இயல்பாகவே ‘கோணல்’ காணப்படுவதால் ஆண்கள் அவர்கள் தொடர்பில் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என (ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்துள்ளார்கள்.பெண்களிடம் காணப்படும் ‘கோணல்’ இயல்பிலேயே இருப்பதால் அதனை சரிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் விபரீதமான விளைவையே ஏற்படுத்தும். அதாவது, மணவிலக்கு இட்டுச் செல்லும்.பெண்களிடம் இருக்கும் அந்த ‘கோணலினால்’ ஏற்படும் அசௌகரியங்களை பொறுமையுடன் சகித்துக்கொண்டு வாழ வேண்டும்.

 

நபி (ஸல்) குறிப்பிடும் கோணல் எது?

இங்கு (ஸல்) அவர்கள்’கோணல்’ எத்தகையது என்றோ அதனது அளவு எத்தகையது என்றோ குறிப்பிடாமல், அதனது விளைவை மாத்திரம் குறிப்பிட்டுள்ளானர். அதாவது, ஆண்களை அசௌகரியப்படுத்தக்கூடிய விதத்தில் பெண்கள் நடந்துகொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் மேற்போந்த ஹதீஸ்களில் வரும் ‘கோணல்’ பெண் என்பவள் இயல்பிலேயே வஞ்சகம் உடையவள் என்றும், பிறரை இலகுவில் ஏமாற்றக்கூடியவள் என்றும் விளக்கமளித்துள்ளார்கள். உண்மையில் இந்த விளக்கம் சுத்த அபத்தமானதாகும். ஏனெனில், இஸ்லாமிய வரலாறு சான்றுபகரும் சஹாபாப் பெண்மணிகள் இத்தகைய பண்பை பெற்றிருக்கவில்லை. அதோடு, எம்மோடு ஒன்றாக வாழும் தாய்மார்களிடமோ அல்லது சகோதரிகளிடமோ இத்தகைய நீசத்தனமான பண்பு இல்லை என்பது நடைமுறைச் சான்றாகும். அத்தகைய, பண்பைக் கொண்டிருக்கும் பெண்ணிடம் சந்ததிகளை பெற்று வளர்க்கும் பாரிய பொறுப்பை இறைவன் ஒப்படைப்பான் என்றும் எதிர்பார்க்க முடியாது.

எனவே, இங்கு (ஸல்) அவர்கள் குறிப்பிடும் கோணல் மிக விரைவாக உணர்ச்சிவசப்படுவதையும், ஆவேசமடைவதையும், பல இயற்கை உபாதைகளால் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தையுமே குறிக்கும். எனவேதான், (ஸல்) அவர்கள் ‘அவள் ஒரே வழியில் உனக்கு இணங்கமாட்டாள்’ என்று கூறியுள்ளார்கள். இத்தகைய மாறுதல், ஆண்களை பெரும்பாலும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கும். இதை உணராமல் பெண்ணுடைய இயல்பை மாற்ற முனைவது சாத்தியமற்றது என்பதையும் மணவிலக்குக்கு இட்டுச்செல்லும் என்பதையும் ஆண்கள் மனங்கொள்ள வேண்டும். அதேவேளை இயல்பிலேயே அவளிடம் காணப்படும் அந்தக் கோணல் அவளுக்குச் சாட்டப்பட்டுள்ள பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்கு  பெரிதும் உதவியாக இருக்கிறது என்பது கூடுதல் செய்தியாகும்.

 

ஆண்களுக்கான அறிவுரை:

இத்தகைய குறைகள் பெண்களிடம் இயல்பிலேயே இருக்கின்றன என்பதையும், தம்மை சங்கடத்துக்குள்ளாக்கும் நோக்கில் வேண்டுமென்று பெண்கள் நடந்துகொள்வதில்லை என்பதை ஆண்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏலவே, குறிப்பிட்டது போன்று அவள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களான பிள்ளைகளைப் பெற்றெடுத்தல், பாலூட்டல், பராமரித்தல் போன்றவற்றை திறன்படச் செய்வதற்கு  அவளது உணர்ச்சி மிகுந்த இயல்பு பேருதவியாக திகழ்கிறது. எனவே, உணர்ச்சிவயப்பட்டு, அல்லது ரோஷமடைந்த நிலையில் அவளிடமிருந்து வெளிப்படும் நடவடிக்கைகளை மிக நிதானத்துடன் கையாள்வது ஆண்கள் மீதுள்ள கடமையாகும். அவ்வாறு இல்லையெனில், கனவன் மனைவிக்கிடையில் பிரிவினையும், வெறுப்பும் அதிகரித்து, ஈற்றில் அது மண விலக்குக்கு இட்டுச் செல்லும்.

இத்தகைய சிக்கலைத் தீர்க்க (ஸல்) அவர்கள் முன்வைக்கும் தீர்வு கவனத்திற்குரியது. “ஒரு முஃமினான ஆண், முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் அருவருக்கத்தக்க குறையொன்றைக் கண்டால், அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்பையிட்டு திருப்தி கொள்ளட்டும்” என்று (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பெண்களிடம் இருக்கும் குறைகளை பெரியளவில் பொருட்படுத்தாது, ஏனைய நற்பண்புகளை இட்டு திருப்தி அடைய வேண்டும் என்பதை தெளிவாக இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது. எனவே, (ஸல்) அவர்கள் பெண்கள் தொடர்பில் ஆண்களை நோக்கி “பெண்களுடன் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள்” என்ற அறிவுரையை ஏற்று நடக்கும்போது, கணவன்-மனைவிக்கிடையில்  சுமுகமான உறவு நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு