கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுள் இரண்டாவது பெரிய பிரதேசமாக கிண்ணியா விளங்குகின்றது. ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் இங்கு பல்வேறு வளங்கள் காணப்படுகின்றன. எனினும் இவற்றில் சில பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் பல பயன்படுத்தாமலேயே இருக்கின்றன.
எனவே, கிண்ணியாவில் காணப்படும் வளங்கள், அவற்றின் பயன்பாட்டுத் தன்மை என்பன குறித்து நாம் இக்கட்டுரை மூலம் விளங்கிக் கொள்வோம்.
மனிதவளம்
கிண்ணியாவில் உள்ள வளங்களுள் மிகவும் முக்கியமானது மனித வளமாகும். இங்கு 17233 குடும்பத்தைச் சேர்ந்த 75699 பேர் வாழ்கின்றனர். இவர்களுள் 18 வயதுக்கு குறைந்தோர் 34795 பேர். 18 வயதுக்கு மேற்பட்டோர் 40904 பேர் ஆவர். ஆண்கள் 37831 பேர். பெண்கள் 37868 பேர் ஆவர்.
இவர்களுள் அரச உத்தியோகம் செய்வோர் ஏறத்தாழ 2000 பேர் மாத்திரமே. இவர்களுள்ளும் அதிகமானோர் ஆசிரியர்களாவர். இதனைத் தவிர பிரிமா, மிட்சுயி ஆகிய தனியார் நிறுவனங்களிலும், அரச சார்பற்ற நிறுவனங்களிலும் ஓரளவு கூடுதல் தொகையினர் தொழில் புரிகின்றனர்.
தொழில் இல்லாதோர் எண்ணிக்கை ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் இங்கு கூடுதலாகவே உள்ளது. இங்கு தொழில் இன்றி இருப்போரின் எண்ணிக்கை சுமார் 16 ஆயிரம் ஆகும். இதில் க.பொ.த (உ.த) தகுதியுள்ளோர் சுமார் 12 ஆயிரம் பேர் ஆவர். எனவே, இந்த மனித வளங்கள் எவ்வித பயன்பாடுமின்றி இருப்பது கவலை தரக் கூடிய விடயமாகும்.
கடல்
கிண்ணியாவின் காக்காமுனை முதல் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு வரையான தம்பலகமக்குடா, கொட்டியாரக்குடா ஆகியன கிண்ணியாவுக்கான கடல் வளங்களாகும். இவை சில இடங்களில் பிரதேசத்துக்குள் ஊடறுத்தும் செல்கின்றன.
இதன் மொத்த பரப்பளவு சுமார் 18 சதுர கிலோமீற்றர்களாகும். இவை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. பல்வேறு காரணங்களால் இவற்றில் குறித்த வீதமான பகுதி மட்டுமே பயன் படுத்தப்படுகின்றது.
இந்தக்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் ஒரு காலத்தில் கிண்ணியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது சில வேளைகளில் கிண்ணியாவுக்கே மீன் தட்டுப்பாடு வந்து விடுகின்றது. இதனை விட இறால், நண்டு வளர்ப்புக்கான சூழ்நிலையும் இங்கு காணப்படுகின்றது.
நீர் நிலைகள்
கிண்ணியாவின் தென்எல்லையாகக் காணப்படும் மகாவலி கங்கை, மற்றும் இடையிடையே காணப்படும் ஓடைகள், பீங்கான் உடைஞ்ச ஆறு, குசுமன்கடவல ஆறு என்பன மற்றும் சில வளங்களாகும். இவற்றின் மொத்த நீளம் ஏறத்தாழ 38 கிலோமீற்றர்களாகும்.
விறால், கனையான் போன்ற பிரசித்தி பெற்ற கருவாடுகள் இந்த நீர்நிலைகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. இந்த நீர் நிலைகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்கை மட்டுமன்றி ஏராளமான ஏக்கர் காணிகளில் மிளகாய், கத்தரி, வெங்காயம் போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு அதிகமானவை வெளிமாவட்ட சந்தைகளுக்கு அனுப்பப்பட்டன.
இதேபோல மகாவலி கங்கை கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதியில் மீன்களுக்குத் தேவையான பிளாண்டன் எனப்படும் மீன் உணவுகள் இருப்பதால் இப்பகுதியில் நல்ல மீன்கள் பிடிக்கப்படும் வாய்ப்பு இருக்கின்றது.
வயல் நிலம்
கிண்ணியாவின் பிரதான தொழில்களுள் விவசாயமும் ஒன்றாகும். இருவகையான வயல் நிலங்கள் கிண்ணியாவில் காணப்படுகின்றன. பெரும்போகம் மட்டும் செய்யக் கூடியவை, பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரண்டும் செய்யக் கூடியவை என்பன அவையாகும். தீனேறி, கண்டல்காடு, குரங்குபாஞ்சான், சாவாறு, பெரியவெளி, சின்னவெளி போன்றன முக்கிய வயல் வெளிகளாகும்.
மொத்தமாக சுமார் 12ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் கிண்ணியாவில் காணப்படுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் இரு போகம் செய்கை பண்ணக் கூடியவையாகும்.
கிண்ணியாவின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 35 வீதமானோர் விவசாயிகளாவர். இங்குள்ள எல்லாக் காணிகளிலும் விவசாயம் செய்யும் போது அரிசியில் தன்னிறைவு காணப்பட்டதோடு அதிகமானோருக்கு தொழில் வாய்ப்பும் கிடைத்தது.
குளங்கள்
இலங்கையில் மூன்று வகையான குளங்கள் காணப்படுகின்றன. அவை பெரிய குளங்கள், நடுத்தரக் குளங்கள், சிறுகுளங்கள் எனப்படும். கிண்ணியாவில் பெரிய குளங்கள் இல்லை. குரங்குபாஞ்சான் மட்டும் நடுத்தரக்குளமாகும். இதனை விட சிறிய குளங்கள் 9 காணப்படுகின்றன.
இந்தக்குளங்கள் விவசாயச் செய்கைக்கு மட்டுமன்றி மீன்பிடிக்கும் பயன் படுகின்றன. சுமார் 1200 ஏக்கர் வயல் நிலங்கள் இந்தக்குளங்கள் மூலமாக செய்கை பண்ணக் கூடிய வாய்ப்பிருக்கின்றது.
களிமண்
சூரங்கல், மகருகிராமம், நடுஊற்று, ஆயிலியடி, மணியரசங்குளம், மஜீத்நகர் உப்பாறு போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நல்ல களிமண் வளம் காணப்படுகின்றது. இந்த மண் முன்னைய காலங்களில் வீடு கட்டுவதற்கும், செங்கல் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. எனினும், தற்போது களிமண்ணால் வீடு கட்டும் முறை மறைந்து வருவதால் செங்கல் தயாரிப்பதற்கு மட்டும் இம்மண் பயன்படுகின்றது.
கிண்ணியாவில் வருடாந்தம் ஏறத்தாழ 50 கற்சூலைகள் இயங்குகின்றன. ஓவ்வொரு சூலையும் குறைந்தது வருடம் 1 இலட்சம் செங்கற்களைத் தயாரிக்கின்றன. இதன்படி பார்த்தால் கிண்ணியாவில் வருடாந்தம் 50 இலட்சம் செங்கற்கள் தயாரிக்கப் படுகின்றன.
இதனை விட இந்த மண் நல்ல வளமுள்ள மண் என்பதால் விவசாயச் செய்கைக்கும் பெருமளவு பயன்படுகின்றது. கிண்ணியாவில் ஏறத்தாழ 60 சதுர கிலோ மீற்றர் பரப்பில் களிமண் வளம் காணப்படுகின்றது.
சிப்பிகள்
கிண்ணியாவின் நடுத்தீவு பகுதியில் பெருமளவு சிப்பிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இறந்தவை. இன்னும் சில உயிருள்ளவை. எனினும் மொத்தமாக இவை சேகரிக்கப்பட்டு சிப்பி ஆலைகளில் அரைக்கப் படுகின்றன. இவ்வாறு அரைக்கப்பட்ட சிப்பிகள் விலங்குணவுக்குப் பயன் படுத்தப்படும் பொருட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
கிண்ணியாவில் ஏறத்தாழ 40 சிப்பி அரைக்கும் ஆலைகள் இயங்குகின்றன. வாராந்தம் சுமார் 80,000 கிலோ சிப்பித்தூள் இங்கிருந்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
உப்பு
கிண்ணியா – தம்பலகமம் வீதியிலுள்ள கச்சக்கொடித்தீவு என்ற இடத்தில் உப்பளம் இருக்கின்றது. இந்த உப்பளத்தில் சுமார் 400 பேருக்கு உப்பு வயல்கள் இருக்கின்றன. இவற்றுள் சில சிறியவை. இன்னும் சில பெரியவை. சுமார் 8 வருட காலமாகவே இங்கு உப்பு உற்பத்தி முறையாக மேற்கொள்ளப் படுகின்றது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பில் அயடீன் கலக்கப்படாமையால் உணவுத் தேவைக்கு அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் கருவாடு, மரங்களைப் பதப் படுத்தல், மிருகத் தோல்களைப் பதப்படுத்தல் போன்ற தேவைகளுக்காக இந்த உப்பு பயன் படுத்தப் படுகின்றது.
வருடாந்தம் மார்ச் - செப்டம்பர் மாதங்களுக்கிடையில் இங்கு உற்பத்தி இடம்பெறுகின்றது. வருடாந்தம் இங்கு சுமார் 2 இலட்சம் கிலோ கிராம் உப்பு உற்பத்தியாகின்றது. இதற்கு முறையாக அயடீன் கலக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மைகளை அடைய முடியும்.
மணல்
கட்டுமானத் தேவைகளுக்கு மணல் மிகவும் முக்கியமானது. பொதுவாக கிண்ணியாவின் கட்டுமானத் தேவைகளில் பெரும்பாலும் கிண்ணியா மணலைக் கொண்டே நிவர்த்தி செய்யப் படுவதோடு தற்போது வெளியிடங்களுக்கும் இவை எடுத்துச் செல்லப்படுகின்றன. மணல் அகழ்வுக்கு அரசாங்கச் சட்டத்திட்டங்களின் படி முறையான அனுமதி பெறப்பட்டு இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கிண்ணியாவில் பூவரசந்தீவு, சின்னத்தோட்டம், ஈச்சந்தீவு போன்ற இடங்களில் மணல் அகழ்வு இடம்பெற்றது. தற்போது கங்கைப் பகுதியில் இது இடம் பெறுகின்றது. இங்கு மாதாந்தம் சுமார் 2 ஆயிரம் கியூப் மணல் அகழ்வு செய்யப் படுகின்றது.
கிரவல்
கிண்ணியாவில் மகருகிராமம், நடுஊற்று, ஆயிலியடி போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிரவல் காணப்படுகின்றது. எனினும், இவை முதலாந்தரக் கிரவல் அல்ல. இரண்டாம், மூன்றாம் தரக் கிரவலாகவே இவை காணப் படுகின்றன.
இங்கு பெறப்படும் கிரவல் வீதியமைப்பு, காணி நிரப்புதல், வீட்டு அத்திபாரம் நிரப்புதல் போன்ற தேவைகளுக்கு பயன் படுத்தப் படுகின்றது. வருடாந்தம் சுமார் 40 ஆயிரம் கியூப் கிரவல் இங்கிருந்து பெறப்படுகின்றது.
கருங்கல்
கிண்ணியாவில் காணப்படும் மற்றுமொரு வளம் கருங்கல்லாகும். பெரும்பாலும், மஜீத்நகர், நடுஊற்று ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலேயே கருங்கல் காணப்படுகின்றது. வீட்டு அத்திபாரம், தார் வீதியமைப்பு போன்ற தேவைகளுக்கு இந்தக் கல் பயன்படுகின்றது.
இது மிகவும் கஷ்டமான தொழில். கையினாலேயே இந்தக் கல் உடைப்பு பணி இடம்பெறுகின்றது. வருடாந்தம் சுமார் 2 ஆயிரம் கியூப் கல் இங்கிருந்து பெறப்படுகின்றது.
காடுகள்
கிண்ணியாவில் இருவகையான காடுகள் இருக்கின்றன. வனவளத் திணைக்களத்தின் கீழ் வரும் காடுகள், கண்டல் தாவரங்கள் என்பன அவையாகும். சுமார் 2429 ஏக்கர் அடர்ந்த காடும், 1750 ஏக்கர் திறந்த வெளிக்காடும் வனவளத்திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன. இவை சுண்டன்காடு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
கண்டல் தாவரங்கள் சுமார் 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் காணப்படுகின்றன. இவை குறிஞ்சாக்கேணி, நடுத்தீவு, காக்காமுனை, முனைச்சேனை, கச்சக்கொடித்தீவு, சூரங்கல், உப்பாறு, சம்மாவச்சதீவு, மாலிந்துறை போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணப்படுகின்றன.
கால்நடைகள்
கிண்ணியாவின் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்களிப்பும் மிகப் பிரதானமானதாகும். எருமை உட்பட மாடு, ஆடு, கோழி என்பன பிரதான கால்நடைகளாகும். இவற்றை விட தாரா, புறா, முயல், காடைக்கோழி என்பனவும் சிறிய அளவில் வளர்க்கப்படுகின்றன.
கிண்ணியா அரசாங்க மிருக வைத்திய அதிகாரி அலுவலகக் கணக்கின் படி கிண்ணியாவில் 17 ஆயிரம் மாடுகளும். 2850 ஆடுகளும், 35,800 கோழிகளும் இருக்கின்றன. கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரை கிண்ணியாவில் இல்லாமல் இருப்பது பெருங்குறையாகும். இதனால் மேய்ச்சல் தரைக்காக சுமார் 2ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை ஒதுக்கும் ஏற்பாடுகள் பிரதேச செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீட்டுத்தோட்டம்
காக்காமுனை, சம்மாவச்சதீவு, உப்பாறு போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கிண்ணியாவின் வீட்டுத் தோட்டச் செய்கைக்கு பிரபல்யம் பெற்றவையாகும். கத்தரி, மிளகாய், வெண்டி, பயற்றை போன்றன இங்கு செய்கை பண்ணப்படுகின்றன.
கிண்ணியாவின் தேவைக்கு மேலதிகமானவை தம்புள்ள, திருகோணமலை போன்ற சந்தைகளுக்கு அனுப்பப் படுகின்றன. மேற்கூறிய காய்கறிகள் வருடாந்தம் சுமார் 5 ஆயிரம் தொன் அளவில் உற்பத்தியாகின்றன. உப்பாறு பகுதி முழுமையாக பயிர் செய்கைக்கு அனுமதிக்கப் படுமாயின் நாட்டின் வேறு சந்தைகளுக்கும் இங்கிருந்து காய்கறிகளை அனுப்ப கூடியதாக இருக்கும்.
இறால் பண்ணை
கிண்ணியாவின் சுவாத்தியம் இறால் பண்ணைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கின்றது. குறிஞ்சாக்கேணி பகுதியில் இரண்டு இறால் பண்ணைகள் இயங்கின. எனினும் தற்போது இவை இயக்கமில்லாமல் இருக்கின்றன.
தென்னை
இலங்கையின் பணப்பயிர்களுள் ஒன்றான தென்னைகளும் கிண்ணியாவில் இருக்கின்றன. உப்பாறு, பைசல்நகர், அண்ணல்நகர், ஈச்சந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, ஆயிலியடி போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அதிகமாக தென்னைகள் காணப்படுகின்றன. இன்னும் தேவையான தென்னங்கன்றுகளை நடும் வாய்ப்பும் இருக்கின்றது.
கிண்ணியாவின் தேவைக்குப் போதுமான தேங்காய்கள் இங்கு உற்பத்தியாகவில்லை. இதனால் குருநாகல் மாவட்டத்திலிருந்தும் தேங்காய்கள் கிண்ணியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
தென்னந்தும்பினால் குடிசைக் கைத்தொழில் நடவடிக்கைகள் பெரியாற்றுமுனை, கச்சக்கொடித்தீவு போன்ற பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.
கடல்பாசி
கிண்ணியாவில் மே – ஆகஸ்ட் மாதங்களில் கண்டலடியூற்றுக்கு அண்டிய பகுதிகளில் கடல்பாசிகள் வரும். இவை சேகரிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்படுகின்றன. உணவுக்காக இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
இது ஒரு குறித்த சீசன் தொழிலாக உள்ளது. கிண்ணியாவில் 5 பாசி வாடிகள் இந்தச் சீசனுக்கு தொழிலில் ஈடுபடுவதை அவதானிக்க முடியும்.
***************************
கிண்ணியாவில் இவ்வளவு வளங்களும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நன்கு பயன்படுத்தப் படுமாயின் பின்வரும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
1. அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்
2. பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணலாம்.
3. சகல வழிகளிலும் கிண்ணியா முன்னேற்றம் காணும்.
4. இவையனைத்துக்கும் மேலாக நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு கனிசமான பங்களிப்புகளை செய்ய முடியும்.
இவை கிண்ணியாவின் வளங்கள் சம்பந்தமான சுருக்கக் குறிப்புகளாகும். பல்கலைக்கழக மாணவர்கள் இவற்றை அடிப்படையாக வைத்து இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.
தகவல்:
நன்றி முஸ்இல் சேர்
Comments
Post a Comment