ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு
மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களை தன் சகோதரர் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களையும் அழைத்துக் கொண்டு ஃபிர்அவ்னை சந்திக்க செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்கள் நாங்கள் உலக இரட்சகனான அல்லாஹ்வின் திருத்தூதர்கள் அதனால் அல்லாஹ்வை நீ ஏற்றுக்கொள், இஸ்ராயீலின் சந்ததியினரை எங்களுடன் அனுப்பிவை என்றும் நானே இறைவன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்.
ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து இஸ்ராயீலர்களை காப்பற்ற மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முடிவு செய்தார்கள். மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான இஸ்ராயீலர்களை ரகசியமாக எகிப்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த ஃபிர்அவ்ன் ஒரு பெரும்படையுடன் அவர்களை பிடிக்க புறப்பட்டான். செங்கடலின் வடக்கு எல்லையில் உள்ள சூயஸ் வளைகுடாவின் வடக்கு எல்லைக்கு இரண்டு கூட்டத்தாரும் சென்று சேர்ந்தனர் என்று வரலாறு கூறுகிறது. இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்டான்.
“உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. அல்குர்ஆன் 26:63
தண்ணீர் இல்லாமல் வறண்டு போன பாதை கால்வாயின் நடுவில் தோன்றியது. அப்பாதையில் இஸ்ராயீலர்கள் மறுகரையில் உள்ள சினாய் பகுதிக்கு தப்பிச் சென்றனர். ஃபிர்அவ்னும் அவனது படையினரும் கடலின் நடுவில் தோன்றிய பாதையில் நுழைந்து இஸ்ராயீலர்களை பிடிப்பதற்க்கு ஓடிச்சென்றனர். ஆனால் அவர்கள் பாதையின் நடுவே சென்று கொண்டிருக்கும் போது அந்த பாதையை அல்லாஹ் மீண்டும் கடலாக மாற்றினான். ஃபிர்;அவ்னும் அவனது படையினரும் தண்ணீரில் முழ்கி இறந்தனர். ஃபிர்அவ்னுடைய பிரேதத்தை ஒரு அத்தாட்சியாக்கி நிலைநிறுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்.
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:90-92
அல்குர்ஆனில் கூறப்பட்டது உண்மையாகிவிட்டது. 1898ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட ஃபிர்அவ்னின் இந்த உடல் எகிப்து அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி ஹாலில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வுடல் 202 சென்டிமீட்டர் நீளமுள்ளது. கி.மு. 1235ல் தண்ணீரில் முழ்கடிக்கப்பட்டு இறந்துபோன ஃபிர்அவ்னின் உடல் பல ஆண்டுகளுக்கு மேலாகியும் கெட்டுப்போகமல் அல்லாஹ் கூறியது போல பாதுகாக்கப்பட்டிருப்பது அல்குர்ஆன் ஒரு இறைவேதம் என்பதற்க்கு மாபெரும் சான்றாகும்.
Comments
Post a Comment