திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா?

திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா?

பதில் : ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. - அல்குர்ஆன் (30 : 21)

எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) - முஸ்லிம் 2611

தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.
தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான்.
திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்
தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்கு காரணம்.
எனவே தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு