நேற்று இரவு பொலிசாரை உசார்படுத்தி மைத்திரி, ரணில் இரகசிய சந்திப்பு, நடந்தது என்ன?
நேற்றைய தினம் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அவசர எச்சரிக்கை இன்னும் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் தயார் நிலையில் இருக்கும் என பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், அது குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளமையை அடுத்தே, இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் மூலம் ஒரு சில கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை வளைத்துக்கொண்டு சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஜாதிக கெல உறுமய, தொண்டமான், டக்லஸ் தேவாநாந்த மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுடன் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதே ஜனாதிபதியின் தீட்டம் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்கலாம் என்றும் ஊகங்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்றிரவு பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்கவும் பங்கேற்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மாத்திரமன்றி எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த அணி தனித்துப் போட்டியிட்டால் தான் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ளதாலேயே மஹிந்தவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் கரிசனையையும் மைத்ரி வெளியிட்டிருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் இதன் உச்ச கட்டமாகவே சட்டம் ஒழுங்கு அமைச்சின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்களும், அரச தரப்பு அரசியல் முக்கியஸ்தர்களும் தெரிவிக்கின்றனர்.
2002ம் ஆண்டு காலத்தில் பாராளுமன்றம் ஒரு கட்சியாகவும் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் இருந்த வேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஐ.தே.க ரணில் அரசை காரணம் எவும் இன்றி கலைத்து விட்டு கடந்த கால அரசியலில் நடந்த கசப்பான சம்பவத்தையும் யாரும் மறக்க முடியாது.
இதேவேளை, நாட்டில் ஏதேனும் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த திட்டமொன்றிற்காகவே இந்த தயார்ப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment