கல்வியில் கிண்ணியாவை விட மூதூர் பாரிய முன்னேற்றம்
புலமைப்பரிசில் பரீட்சையில் கிண்ணியா வலயத்தில் மொத்தம் 24 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அதேசமயம் எமது பக்கத்து வலயமான மூதூர் வலயத்தில் 134 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அத்தனை வளங்களும் கிண்ணியாவில் இருந்தும் ஏன் எமது மாணவர்கள் கூடுதலானோர் cut off புள்ளிகளுக்கு மேல் பெறவில்லை என்ற கேள்வியை யாராவது தொடுத்தால் அனைவரும் நேரடியாக கைகாட்டுவது ஆசிரியர்கள் பக்கம்தான். ஆனால் ஒரு உண்மையை விளங்க வேண்டும் எந்த ஒரு ஆசிரியரும் தன்னிடம் கற்கும் மாணவர்கள் சித்தியடைந்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதையும் தாண்டி ஏதோ ஒரு குறை யாரிடமோ உள்ளது. அதை பார்க்க முன் ஒரு சிறிய சம்பவம்.
கடந்த புலமைப்பரிசில் பரீட்சை மேற்பார்வைக்காக மூதூர் மத்திய கல்லூரிக்கு சென்றேன். அங்கு பரீட்சைக்கு முந்தைய நாள் மண்டப ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளும்போது அந்த வலய பாடசாலையில் கற்பிக்கும் ஒரு ஆசிரியரையும் சில பெற்றோர்களையும் மண்டபத்துக்கு வெளியில் நட்பு நிமிர்த்தம் சந்தித்த போது அவர்களிடம் மாணவர்களின் தயார்நிலை பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் அளித்த பதில் என்னை அசர வைத்தது. தரம் 4க்கு வந்தவுடன் அந்த வகுப்பாசிரியரின் பொறுப்பில் தங்களது பிள்ளையை முழுமையாக ஒப்படைத்து விடுகிறார்கள். அதாவது புலமைப்பரிசில் பரீட்சை முடியும்வரை அந்த மாணவன் தனது வீட்டுக்கு போக முடியாது. ஆசிரியரின் வீட்டில் மாணவர்கள் தங்கி அவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் படிக்கிறார்கள். கலியாண வீடு அல்லது மரணச்சடங்கு மற்றும் பெருநாள் தவிர்ந்த எந்த ஒரு நிகழ்வுக்கும் மாணவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாது. பெற்றார்கள் தினமும் ஒரு தடவை பார்வையிடலாம் என்றனர். உடனே நான் இது அவர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கு சமன் இல்லையா எனக்கேட்டேன். அதற்கு அவர்கள் மாணவர்களை மன ரீதியாக தயார்படுத்தியே அங்கு அனுப்புகிறோம். அவர்கள் சுதந்நிரமாக விளையாட படிக்க அனைத்துக்கும் அங்கு இடமுண்டு எந்த ஒரு குறையுமின்றி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதே நோக்கம் என்றனர். எனக்கு இதில் பெரிய உடன்பாடு இல்லாவிடினும் அவர்கள் மனது நோகாதபடி நல்லதுதான் எனக்கூறினேன். அவர்களது அடுத்த கோரிக்கை தயவு செய்து 100% நேர்மையாக செயற்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை வளர்த்திடுங்கள் என்றனர். எந்த ஒரு மாணவனுக்கும் ஒரு சிறிய உதவியேனும் செய்யாதீர்கள் என்றனர்.
மறுநாள் காலை பரீட்சை மண்டபத்துக்கு வெளியே மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களும் பெற்றோரும் அழைத்துவந்து அங்கு அவர்கள் மாணவர்களை தைரியப்படுத்தியதும் உற்சாகப்படுத்தியதும் மெய்சிலிர்க்க வைத்தது. மண்டபத்தில் பயத்தை போக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பரீட்சை மண்டபத்தில் மாதிரி வினாத்தாள் பரீட்சை எழுதவைத்து தைரியப்படுத்தியுள்ளனர். ஒரு ஆசிரியர் உங்கள் நேர்மையிலேயே மாணவர்களின் வெற்றியும் நாங்கள் பட்ட கஷ்டங்களும் இருக்கின்றன என்றார். அவர்கள் எதிர்பார்த்தது போலவே பரீட்சை எந்தவித தங்கு தடையுமின்றி சிறப்பாக முடிந்தது. பரீட்சை முடிந்து வெளியேறியதும் ஒரு மாணவன் தனது ஆசிரியையிடம் பழக்க தோஷத்தில் இன்று எத்தனை மணிக்கு டியூஷன் எனக்கேட்க அந்த ஆசிரியை கண்ணில் கண்ணீரோடு இனி சந்தோஷமாக எல்லா இடமும் சென்று வாருங்கள் எனக்கூறி அந்த மாணவனை ஆரத்தழுவி அனுப்பியதில் தெரிந்தது அவர்கள் இதற்காக எடுத்துக்கொண்ட சிரமங்கள். பெற்றார்கள் ஆசிரியராகள் மேல் வைத்துள்ள மரியாதை அளப்பரியது. என்னைப்பொருத்தவரை அங்கு 134 மாணவர்கள் சித்தியடைந்தது ஆச்சரியமான விடயமல்ல.
இப்போது கிண்ணியாவின் விடயத்துக்கு வருவோம். உங்களில் எத்தனை பெற்றோர் உங்கள் பிள்ளைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வளவு கவனம் செலுத்தினீர்கள்? இங்கு எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களையே குறை சொல்லி பழக்கப்பட்டு விட்டோமே! உங்கள் பிள்ளைகள் computer ல் smart phone ல் Game விளையாட வேண்டும் நாடகம் படம் போன்றவற்றை உங்களோடு அமர்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் செல்லும் இடங்கள், ஊர்களுக்கெல்லாம் அழைத்துப்போக வேண்டும் 8 மணியோடு தூங்க வேண்டும் ஆனால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவும் வேண்டும். இல்லாவிட்டால் கற்பித்த ஆசிரியர் ஒழுங்காக கற்பிக்க வில்ல என பழி சர்வசாதாரணமாக அவர்மேல் விழுகிறது. எந்த ஊர் நியாயம் இது? கிண்ணியாவில் உள்ள திறமையான ஆசிரியர்களை பயன்படுத்த தெரியாமல் இருக்கும் பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள். இனிவரும் காலங்களில் தவறுகளை திருத்தி எமது மாணவச் செல்வங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல ஆசிரியர்களுடன் கலத்து பேசி ஒத்துழைத்து செயற்படுங்கள். வெறும் பணத்தை வாரி இறைத்தாலோ பெரிய பாடசாலையில் சேர்த்தாலோ வெற்றி கிடைக்காது. அதற்கும் மேல் அல்லாஹ்வின் நாட்டமும் தியாகத்துடன் கூடிய முயற்சியும் வேண்டும்.
நன்றி அஸாம் ஏ கரீம்
Comments
Post a Comment