கிண்ணியா இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை

எனது கண்களால் கண்ட சில விடயங்களை  வைத்து  இந்த  கட்டுரையை  எழுதுகிறேன் முன்பு  ஒருவர் சிகரெட்  பிடிப்பது  என்றால்   டீ கடைக்கு  பின்னல்  யாருக்கும்  தெரியாமல்  ஒளிந்து  ரகசமாக  பிடிப்பதை  பார்த்திருக்கிறேன்  .ஆனால் இன்று நிலைமை அப்படியே  தலை  கீழ்  .இன்று எமது இளைஞர்களை  அதிக  வகையான  போதை பொருட்கள் ஆட்கொண்டிருப்பதை  காணக்கூடியதாக  உள்ளது .அதில் பிரதானமாக  KG என்று அழைக்கப்படும்  கேரளா   கஞ்சாவை குறிப்பிடலாம்  .

12 வயது  சிறுவர்  முதல்  60 வயது முதியவர் வரை இதனை  புகைப்பதை  எமது ஊரில்  காணக்கூடியதாக உள்ளது  .வட மாகாணத்தில்  இளைஞர்களை மீண்டும்  யுத்தத்தின்  பக்கம்  திரும்பாமல்  இருக்க அவர்களின் மனநிலையில்  மாற்றத்தை  கொண்டு வர  இணையத்தளம்  , போதை போன்றவற்றில்  கவனத்தை  திசை திருப்பியது  போல முஸ்லிங்களின்  கல்வி வளர்ச்சியில்  குறிப்பாக இளைஞர்களின்  கல்வியை  சீரழிக்க  இன்று எதிரிகளால்  எமது ஊரில்  மற்றும் ஏனைய முஸ்லீம்  பிரதேசங்களில்  இந்த KG என்ற  கேரளா கஞ்சாவை  அதிகமாக  விநியோகித்து  வருகின்றனர்  எதிரிகள். அது புரியாமல்  இன்று எமது இளைஞர்கள்  அவர்கள் வலையில்  சிக்கி   வாழ்க்கையை   கொஞ்சம்  கொஞ்சமாக இழந்துகொண்டு    வருகிறார்கள். கடல்  தொழில் செய்யும் இளைஞர்கள் , தனியார்  நிறுவனங்களுக்கு  தொழிலுக்கு  செல்லும் இளைஞர்கள் , பாடசாலை  மாணவர்கள்   போன்ற பலர் இந்த KG க்கு அடிமையாகி   இருப்பதை காண முடிகிறது. இன்று அரசியல்வாதிகளை புகழ்ந்தும் இகழ்ந்தும் முகநூலிலும் டீக்கடைகளிலும் சண்டை பிடிக்கும் நாம் ஒரு கணம்  எமது எதிர்கால இளைஞர்கள் சீரழிவதை பற்றி சற்று சிந்திப்போமா?

நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒருவன் வருகிறான். பைக்கின் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு இடத்தில் இருந்து சிறிய பொட்டலங்கள் சில எடுக்கிறான். பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. அவன் செல்கிறான். பின்னர் இன்னும் சிலர் அந்த கூட்டத்தோடு இணைந்து கொள்கிறார்கள். பத்து நிமிடத்துக்குள் 2 சுருள் கஞ்சா தயாராகிறது. 15-20 நிமிடத்துக்குள் இழுத்து முடிகிறது. இது நடைபெறும் நேரம் இரவு 8 மணிக்கு முன். அக்கம் பக்கம் உள்ள ஒரு சிலரிடத்தில் விசாரித்தேன் அவர்கள் சொன்ன தகவல் தூக்கிவாரி போட்டது. இதில் படித்தவர்கள் சிலர் கலந்து கொள்கிறார்கள். நான் பார்த்தவன் KG ஏஜன்ட். இரவு 7 மணிக்கு பிறகு 4ம் கட்டைக்கு சென்று அதிவிஷேஷம்,பியர்,லெமன் ஜின் போன்ற மதுசார வகைகளை வாங்கி சரியாக 9 மணிக்கு வருவான் ஒருவன். பின்னர் அனைவரும் சேர்ந்து குடித்துவிட்டு அந்த இடத்திலேயே படுப்பார்கள். அவர்கள் மிச்சம் வைக்கும் கொத்து ரொட்டி,பைட்ஸ் போன்றவற்றை தின்று விட்டு அவர்களுடனேயே தெருநாய்கள் சிலவும் உறங்குகின்றன. திருமணமான சிலர் அதிகாலையிலேயே வீட்டுக்குச் செல்கின்றனர். கள்ளத்தொடர்பு அதிகரிக்க இது ஒரு வகையில் காரணமாக அமைகிறது. இதில் என்ன ஒரு விடயம் புரியவில்லை என்றால் தொழிலுக்கு செல்லாத இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது தான். அதற்கும் ஓரளவுக்கு விடை கிடைத்தது போல ஒரு விடயத்தை ஒருவர் கூறினார். KG மற்றும் போதைக்குளிசை( தற்போது பாமசிகளில் விற்கப்படும் வேறு ஒரு வியாதிக்கான மாத்திரையை அதிக விலை கொடுத்து வாங்கி போதைக்கு பயன்படுத்துகின்றனர்) பயன்படுத்தும் ஒரு இளைஞன் ஒருவரிடம் சென்று அவசரமாக 700 ரூபா பணம் வேண்டும் எனது ஹெல்மட்டை வைத்துக்கொண்டு தாருங்கள் என கேட்டிருக்கிறான் அவர் அவ்வளவு பணம் இல்லை என கூற அவரிடமிருந்த 170 ரூபா பணத்தை வாங்கிக்கொண்டு புது ஹெல்மட்டை விற்றுவிட்டு சென்றுள்ளான். அதன் உண்மையான விலை 3000 க்கு மேல். அவனது சொந்த ஹெல்மெட் இல்லை அவன் விற்றது. பணம் வரும் வழியை இனி நீங்களே யோசியுங்கள்.

அடுத்த சம்பவம் ஒரு விலை கூடிய மோட்டார் சைக்கிளில் 18 வயது நிரம்பிய ஒரு மாணவன் வருகிறான். அவனை கண்டதும் ஏனையவர்கள் உற்சாகமாகிறார்கள் அவர்களுக்கும் அவனுக்கும் நட்பு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் புகைத்துக்கொண்டிருந்த சிகரட்டை வாங்கி புகைத்தான். இவனும் ஒரு ஏஜன்ட் தான் கஞ்சாவை லாவகமாக யாரும் எதிர்பாராத இடத்தில் இருந்து(பைக்) எடுத்தான் புகை பறந்தது.சென்று விட்டான். முகத்தை சரியாக அடையாளம் கண்டு அதிர்ச்சியாகி விட்டேன். ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய மரியாதையும் வசதியுமான குடும்பம் நன்கு படித்து வெளிநாட்டில் பிரஜா உரிமை பெற்று வாழும் அவனது குடும்ப உறுப்பினர்களுக்கு இது தெரிந்தால் அதிர்ச்சியில் இறந்துவிடுவார்கள். இது வழமையான செயற்பாடுகள் தான் என்று ஒருவர் சர்வசாதாரணமாக கூறினார்.

அடுத்த சம்பவம் ஒரு மாலைப் பொழுது சில KG பிரியர்கள் ஒன்று கூடி ஏதோ ஒன்றை எதிர்பார்த்தது போல் இருந்தனர். திடீரென ஒரு இளைஞனுக்கு காக்கா வலிப்பு வந்தது போல நிலத்தில் உருண்டு புரண்டு அடித்து இடித்து தன்னைத்தானே நோவினை செய்து கொண்டான். சற்று நேரத்தில் ஓய்வு நிலைக்கு வந்து வலி தாங்க முடியாமல் அழுதான். இவனுக்கு காக்கா வலிப்பு இல்லை என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் இந்த வலிப்புக்கான காரணம் போதை மாத்திரை மற்றும் KG பயன்பாடு. இது அவனது பெற்றோருக்கும் தெரியும்  என்பதே கசப்பான உண்மை. இன்னும் நிறைய சொல்ல முடியாத சீரழிவுகள் இந்த போதை பாவனையால் எமது சமூகத்தில் தினமும் நடைபெறுகிறது.

இதன் பிரதான நோக்கம் முஸ்லிம்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை சீரழிப்பதாகும்.. இதற்கு பயன்படுத்தும் ஆயுதம் போதை. போதை மட்டும் வேரூன்றினால் மற்றைய அனைத்தும் தானாக நடக்கும். இன்று மார்க்க அறிவு குறைந்தமை, களவு அதிகரித்தமை,விபச்சாரம் பெருகியமை, கள்ளத்தொடர்பு அதிகரித்தமை,அதிகரித்த நோய்கள்,அல்லாஹ்வின் கோபப்பார்வை போன்ற பல விடயங்களுக்கு பின்னால் இந்த KG  என்று அழைக்கப்படும் கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பிண்ணணியாக இருப்பதை மறுக்க முடியவில்லை. இந்த கட்டுரை எழுத 2 வாரங்கள் யோசித்தேன்.பின்னர் கணத்த மனதுடன் எழுதுகிறேன். இனி முடிவு உங்கள் கையில்.

நன்றி : முஹம்மட் அஸாம்

Comments

Popular posts from this blog

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

உலகிலேயே மிகச்சிறிய பறவை (Bee Hummingbird)